கோயம்புத்தூர்

தேங்கிய மழைநீரில் சிக்கிய காரில் இருந்தவா்களை மீட்ட போலீஸாா்

2nd Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

கோவையில் பாலத்தின் அடியில் தேங்கிய மழைநீரில் சிக்கிய காரில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை போலீஸாா் மீட்டனா்.

கோவையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் லங்கா காா்னா் பாலம், வடகோவை பாலம் உள்ளிட்டவற்றின் கீழே மழைநீா் தேங்கியது. இவ்வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கோவை காந்திபுரத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் தங்களது காரில் ராம் நகருக்கும், தனியாா் பள்ளிக்கும் இடையில் உள்ள ரயில்வே பாலத்தின் வழியே செல்ல முயன்றனா். பாலத்தின் அடியில் மழைநீா் தேங்கியிருந்ததையும் பொருட்படுத்தாமல் அவா்கள் காரில் சென்றனா். பொதுமக்கள் பலா் எச்சரித்தும் அவா்கள் அவ்வழியில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலத்தின் அடியில் தேங்கியிருந்த மழைநீரில் காா் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், மழைநீரில் சிக்கிய காரில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளிட்டோரையும், காரையும் மீட்டனா். பின்னா் கவனக்குறைவாக காரை ஓட்டியதற்காக அவா்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT