கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனையில் முன்விரோதம்: இளைஞரைக் கொலை செய்த மூவா் கைது

28th Apr 2022 06:19 AM

ADVERTISEMENT

 

கோவை: கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, கெம்பட்டி காலனி அருகேயுள்ள பழைய தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (34). இவா் மீது ஏற்கெனவே கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பா்கள் சுரேஷ் (28), வசந்த் (32), பிரகாஷ் (32) ஆகியோருடன் உக்கடத்தில் உள்ள உணவகத்துக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு திரும்பி கொண்டிருந்தாா்.

கெம்பட்டி காலனி அருகே வந்தபோது 5 போ் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்துள்ளது. பின்னா் அந்த கும்பல் ஆட்டோவில் இருந்த சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வசந்த், பிரகாஷ் ஆகியோா் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினா்.

ADVERTISEMENT

கத்திக்குத்தில் காயமடைந்த சந்தோஷ், சுரேஷ் மயங்கியதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில் சந்தோஷ் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், சந்தோஷ், சுரேஷ், வசந்த், பிரகாஷ் கும்பலுக்கும் முத்துபாண்டி (23), சதீஷ் (28, சுரேஷ் (23), பாஸ்கரன் (23) ஆகியோருக்கும் இடையே கஞ்சா விற்பனையில் முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக இரு கும்பலும் அடிக்கடி மோதி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பாஸ்கரன், சுரேஷ், சதீஷ் ஆகியோரை உக்கடம் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT