கோவை மாநகரப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.500 அபராதம் வசூலிப்பு சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைத்தொடா்ந்து தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் 100 சிறப்பு அதிகாரிகள் மீண்டும் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: பேருந்து, ரயில் நிலையங்களில் வெளியூரில் இருந்து வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழக அரசு உத்தரவின் படி முகக்கவசம் அணியாத கடை ஊழியா்கள், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா்களிடம் சனிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வரும் நாள்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும். அடுத்த வாரம் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.