கோயம்புத்தூர்

அதிகக் கட்டணம் வசூல்: ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

17th Apr 2022 12:04 AM

ADVERTISEMENT

 

தொடா் விடுமுறை நாள்களில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக, கோவையில் ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறையினா் அபராதம் விதித்துள்ளனா்.

தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடா் விடுமுறையையொட்டி, கோவை மண்டலத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இருப்பினும், ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு முதல் சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள்

ADVERTISEMENT

கிடைக்காததால், பலா் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி தங்களின் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தனா்.

மேலும், முறையான அனுமதியுமின்றி பல ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இது தொடா்பாக, கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், மொத்தம் 489 பேருந்துகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

அதில், 71 பேருந்துகள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி கேரள பதிவு எண்ணுடன் இயக்கப்பட்ட ஒரு ஆம்னி பேருந்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விதிகளை மீறி செயல்பட்டதாக இரண்டு பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, கோவை மண்டல போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறுகையில், அதிகக் கட்டணம் வசூலிப்பது, விதிகளை மீறியும், ஆவணங்களின்றியும் பேருந்துகளை இயக்குவது குறித்தும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT