கோவை, வெள்ளிங்கிரி மலையில் மயங்கி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கரிகாலன் (50). உணவகத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறுவதற்காக கடந்த 13ஆம் தேதி தனது நண்பருடன் கோவை வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இருவரும் மலை ஏறியுள்ளனா். இரண்டாவது மலை ஏறும்போது கரிகாலனுக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் கூடி அவரை மீட்டு முதலுதவி அளிக்க முயற்சித்தனா். ஆனால், அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த பக்தா்கள் வனத் துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கரிகாலனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.