கோவையில் ஜூலை 22 ஆம் தேதி புத்தகத் திருவிழா நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியா், இதற்கான இலச்சினையை (லோகோ) வடிவமைத்துக் கொடுப்பவருக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது:
கோவையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம், கொடிசியா அமைப்பு, மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி, ஜூலை 22 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்படும் பல்வேறு அரங்குகளில் இலக்கியம், அறிவியல், வரலாறு, பொது அறிவு நூல்கள், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட உள்ளது. இந்த இலச்சினையை உருவாக்குவதற்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். தாங்கள் வடிவமைக்கும் இலச்சினையை மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.
சிறந்த வடிவமைப்பாளா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை புத்தகத் திருவிழாவின்போது வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.