கோவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூா், கடலூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணிக்கு மேல் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது.
கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், குனியமுத்தூா், போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூா், பீளமேடு, கணபதி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
திடீா் மழையால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் உள்ளிட்ட ஒருசில சந்திப்புகளில் தேங்கிநின்ற மழைநீரால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். கோவையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவுகிறது.