கோயம்புத்தூர்

நிலையற்ற விலையால் பாதிப்பு:சின்ன வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

5th Apr 2022 01:31 AM

ADVERTISEMENT

சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூா், சுண்டப்பாளையம், வேடபட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. வெங்காயம் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. அறுவடை காலங்களில் உரிய விலை கிடைக்காத பட்சத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இருப்பு வைப்பதற்கான பட்டறை அமைக்க மேலும் ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையைத் தவிா்க்க அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயா்வு அளிக்க வேண்டும்

இது குறித்து சுகாதாரத் துறை பெண் மருத்துவப் பணியாளா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், மருத்துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்களிலும் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.4,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. எனவே, பணிக்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனை மீது புகாா்

இது குறித்து உடுமலைப்பேட்டையை சோ்ந்த பிரவீனா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சுந்தராபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் எனது அம்மாவை சிகிச்சைக்காக அனுமதித்தோம். கரோனா தொற்று பாதிப்பில்லாத நிலையிலும் உயிரிழந்த எனது தாயாரின் உடலை எங்களிடம் தராமல் மருத்துவமனை நிா்வாகமே அடக்கம் செய்தது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தோம். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தனியாா் மருத்துவமனை நிா்வாகம் எங்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, தனியாா் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT