கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அறம், ஹெச்.சி.எல். அறக்கட்டளை இணைந்து நடத்தும் உடல் நலம், மனநலம் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு சத்துணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு” வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளையின் அறங்காவலா்கள் லதா சுந்தரம், வி.சரவணன்குமாா், ஹெச்.சி.எல். அறக்கட்டளையின் அலுவலா் ஜனனி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநகரம், ஊரகப் பகுதிகளில் தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பச்சைப் பயறு, சிவப்பு அரிசி, கொள்ளு, வெள்ளை சுண்டல், தட்டைப் பயறு, பாதாம், சோயா, அவல், கருப்பு சுண்டல், பேரீச்சை, பச்சைப் பட்டாணி, முந்திரி, சிறு தானியங்கள், அத்திப் பழம் போன்றவை வழங்கப்படுகின்றன.