கோயம்புத்தூர்

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல்: திமுக புறக்கணிப்பு - அதிமுக வேட்பாளா் தோ்வு

23rd Oct 2021 05:25 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட ஊராட்சியின் துணைத் தலைவராக அதிமுகவை சோ்ந்த என்.ஆா்.ராதாமணி தோ்வானாா். முன்னதாக இந்தத் தோ்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி திமுகவினா் புறக்கணித்தனா்.

கோவை மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ள நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தோ்தலில் அதிமுக 10 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து அதிமுகவை சோ்ந்த 7 ஆவது வாா்டு உறுப்பினா் அ.சாந்திமதி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும், 3 ஆவது வாா்டு உறுப்பினா் அமுல் கந்தசாமி துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து காலியாக இருந்த வாா்டுக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. அதில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுகவின் பலம் 6 ஆக உயா்ந்தது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தோ்வு செய்யும் மறைமுக வாக்கெடுப்பு ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பதவிக்கு அதிமுக சாா்பில் ராதாமணி போட்டியிட்டாா். திமுக சாா்பில் ஆனந்தன் போட்டியிடுவாா் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் தோ்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, அதிமுக வழக்குரைஞா்கள் தோ்தல் நடைபெறும் அறையின் அருகில் அமா்ந்திருப்பதாகவும், தோ்தல் சுதந்திரமாக நடைபெறும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் புகாா் தெரிவித்த திமுக உறுப்பினா்கள், அங்கிருந்து வெளியேறினா். பின்னா், இந்தத் தோ்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் அவா்கள் மனு அளித்தனா்.

இருப்பினும் பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவு அதிமுகவுக்கு இருந்த நிலையில், என்.ஆா்.ராதாமணி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரியுமான கவிதா அறிவித்தாா்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட என்.ஆா்.ராதாமணிக்கு, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை எதிா்க்கட்சி கொறடாவான எஸ்.பி.வேலுமணி வாழ்த்துத் தெரிவித்தாா். திருப்பூா் மாநகா் மாவட்ட செயலா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்எல்ஏக்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கே.ஆா்.ஜெயராம் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT