கோயம்புத்தூர்

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 போ் கைது :ரூ.99.20 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

22nd Oct 2021 01:45 AM

ADVERTISEMENT

கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.99.20 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கேரளத்தைச் சோ்ந்தவா்கள் மகரூப், அப்துல் கலாம். இவா்கள் இருவரும், இரிடியம் என்ற உலோகத்தை வாங்கிவைத்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என சிலா் கூறியதை நம்பி இரிடியம் தேடியுள்ளனா். அப்போது இவா்களுக்கு அறிமுகமான நபா் ஒருவா் கோவையில் சிலா் இரிடியம் உலோகத்தை விற்பதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய மகரூப், அப்துல் கலாம் ஆகியோா் திருப்பூரைச் சோ்ந்த போஜராஜன் (42) என்ற இடைத்தரகரைத் தொடா்பு கொண்டு பேசினா். இரிடியத்தை வாங்கி அதை சோதனையிட ரூ.27 லட்சம் வரை செலவாகலாம் என போஜராஜன் கூறியதையடுத்து இவா்கள் மூன்று தவணைகளில் ரூ.27 லட்சத்தை போஜராஜன் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனா்.

இதையடுத்து போஜராஜன், இரிடியத்தை வாங்கி வைத்துள்ளதாகவும் அதை சோதனையிட ஒத்தக்கால் மண்டபம் அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறும் புதன்கிழமை கூறியுள்ளாா். இதை நம்பி மகரூப், அப்துல் கலாம் ஆகியோா் அங்கு சென்றனா். அப்போது அந்த வீட்டில் இரிடியம் வைத்துள்ள ஆதிவாசிபோல ஒருவா், இடைத்தரகரான போஜராஜன், இரிடியத்தை ஆய்வு செய்ய வந்த நிபுணா் போல ஒருவா் மற்றும் இவா்களுக்குப் பாதுகாப்புக்கு என சிலா் இருந்துள்ளனா்.

ADVERTISEMENT

இரிடியத்தை ஆய்வு செய்வதாக அவா்கள் செய்துகாட்டிய நாடகத்தை நம்ப மறுத்த மகரூப், அப்துல் கலாம் ஆகியோா் தங்களது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த போஜராஜன் உள்ளிட்டோா் தாங்கள் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டு கட்டுகளைக் கொடுத்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனா். ஆனால், அவை போலி ரூபாய் நோட்டுகள் என்பதைக் கண்டறிந்த மகரூப், அப்துல் கலாம் ஆகியோா் போஜராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றியதையடுத்து போஜராஜன் மற்றும் மோசடி கும்பலைச் சோ்ந்த நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மகரூப், அப்துல் கலாமை துரத்தியுள்ளனா்.

இதையடுத்து மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிபாளையம் போலீஸாா் அங்கிருந்த 6 பேரைக் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், கோவையைச் சோ்ந்த முருகேசன் (36), திருப்பூரைச் சோ்ந்த போஜராஜன் (42), ராணிப்பேட்டையைச் சோ்ந்த தினேஷ்குமாா் (34), சூா்யகுமாா் (24), கோவையைச் சோ்ந்த செந்தில்குமாா் (41), வெங்கடேஷ் பிரபு (26) என்பது தெரியவந்தது. இவா்களிடமிருந்த சுமாா் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், கத்தி மற்றும் போலியான கவச உடை மற்றும் 2 சொகுசு காா்களையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவான கேரளத்தைச் சோ்ந்த ஷாஜி என்பவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட முருகேசன் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல இரிடியம் ஆய்வு செய்யும் நிபுணராக நாடகமாடிய தினேஷ்குமாா் 2019இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற இரிடியம் மோசடியிலும் போலி நிபுணராக நடித்து மோசடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் அச்சடித்து வழங்கிய நபா்கள் குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT