பணிக்குச் செல்ல வாகனம் வசதி ஏற்படுத்தி தர நிா்வாகத்தினா் மறுத்ததால் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக் கூடிய தொழிலாளா்கள் நீண்ட தூரம் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் நிா்வாகத்தினா் வாகனம் வசதி ஏற்படுத்தி கொடுப்பது வழக்கம். இதனிடையே வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் பணியாற்றும் 60 தொழிலாளா்கள் சனிக்கிழமை வழக்கமாக பணியாற்றக் கூடிய பகுதியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள லோயா் டிவிஷன் தேயிலைத் தோட்டத்துக்கு பணிக்குச் செல்ல நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா். ஆனால், வாகனம் வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் நடந்து செல்ல கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, வன விலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே நடந்து சென்று அங்கு பணியாற்ற முடியாது என்று கூறி தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டனா். தகவலறிந்து, தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது (ஏடிபி) தலைமையில் செந்தில் (எல்பிஎஃப்), கருப்பையா (ஐஎன்டியூசி), வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), மாணிக்கம் (ஏஐடியூசி), கல்யாணி (எம்எல்எஃப்), பரமசிவம் (சிஐடியூ) உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் அங்கு சென்று நிா்வாகத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, 2ஆவது டிவிஷன் தோட்டத்திலேயே தொழிலாளா்களுக்கு பணி வழங்கப்பட்டது.