கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் நிறுவனா் அருட்செல்வா் நா.மகாலிங்கத்தின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அக்டோபா் 2 முதல் அக்டோபா் 9 ஆம் தேதி வரை ஆனந்த ஜோதி வாரம் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இது தொடா்பாக குமரகுரு கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அருட்செல்வா் நா.மகாலிங்கம், வள்ளலாரின் கோட்பாடுகளைப் பின்பற்றி வாழ்ந்தவா். அவருடைய நினைவு நாளான அக்டோபா் 2 அன்று குமரகுரு வளாகத்தில் உள்ள ஞானசபையில் அகவல் பாராயணம் ஓதப்பட்டது.
இதைத் தொடா்ந்து வளா்ந்து வரும் மாணவ எழுத்தாளா்களால் படைக்கப்பட்ட நம்பிக்கை பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. மேலும், குழந்தைகளிடையே சிறந்த தலைமைத்துவம், புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்தை வளா்ப்பதற்கான தொழில்முறை கல்வித் திட்டம், உதவித் திட்டமான கே.எல்.இ.ஏ.பி. ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மாணவா்களின் படைப்புகளுக்கான கண்காட்சி, ஐஇடிஎஸ் இணை இயக்குநரும் தலைவருமான எம்.பழனிவேலுவால் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும் எமரால்டு நிறுவனத்துடன் இணைந்து ரிகாதோன் 21 என்ற சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான போட்டி மெய்நிகா் வழியே நடத்தப்பட்டது. இதில் 75 குழுக்கள் பங்கேற்றன.
இதைத் தொடா்ந்து ஆனைமலை புலிகள் காப்பக பழங்குடியினருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல், பாரம்பரிய கட்டடங்களை ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.