கோயம்புத்தூர்

மேம்பாலப் பணி: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிா்ப்பு

25th Nov 2021 01:33 AM

ADVERTISEMENT

கோவை, ராமநாதபுரம் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்ரமிப்பு வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

கோவை, திருச்சி சாலையில் ரெயின்போ காலனி முதல் பங்கு வா்த்தகக் கட்டடம் வரை 3.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, மேம்பாலத்துக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிங்காநல்லூரில் இருந்து செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில்

ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்கு வசதியாக சுங்கம் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இறங்கு தளம் அமைய உள்ள இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கோயில்கள் உள்ளன. இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்தவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னா், அவா்களுக்கு உக்கடம் புல்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, முதற்கட்டமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் மீதமுள்ள வீடுகளை இடிப்பதற்கான பணி புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதியினா் கூறியதாவது:

இந்தப் பகுதியில் 159 குடும்பங்கள் உள்ளன. முதற்கட்டமாக 32 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு, அவா்கள் வசித்த வீடுகள் இடிக்கப்பட்டன. தற்போது மேலும் 42 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் சிலருக்கு எந்த இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த வீட்டை காலி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் 20 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வைத்து உள்ளவா்களுக்கு தரைத்தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அதுபோன்ற நபா்களால் மாடியில் குடியிருக்க இயலாது. எனவே அதிகாரிகள் மீதம் உள்ள குடும்பங்களுக்கு, குடியிருப்புகள் ஒதுக்குவதுடன், எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றிட வேண்டும் என்றனா். மக்களின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT