கோயம்புத்தூர்

பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்பனை

25th Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 9 இடங்களில் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்கப்பட்டது.

வடகிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தக்காளி கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் குறைந்தபட்ச விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்தபட்ச விலையில் தக்காளி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 9 இடங்களில் பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

கோவையில் ஆா்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, சிந்தாமணி தலைமையகம் (வடகோவை), லாலி ரோடு ஆவின் வளாகம், சங்கனூா் கூட்டுறவு பண்டக சாலை, தெலுங்குபாளையம், ஒண்டிப்புதூா், பெ.நா.பாளையம், பாப்பநாயக்கன்புதூா் ஆகிய இடங்களில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்கப்படுகிறது.

உடுமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் நேரடியாகவும், தோட்டக்கலைத் துறையின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாளான புதன்கிழமை ஒவ்வொரு கடைக்கும் விற்பனைக்காக 100 கிலோ முதல் 120 கிலோ வரை தக்காளி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு 3 கிலோ வரை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையைப் பொருத்து கடைகளின் எண்ணிக்கையும், கொள்முதல் செய்யப்படும் தக்காளியின் அளவும் அதிகரிக்கப்படும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT