கோயம்புத்தூர்

நெரிசல் நேரங்களில் சொகுசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கம்: பயணிகள் புகாா்

25th Nov 2021 01:33 AM | வெ.செல்வகுமாா்

ADVERTISEMENT

கோவை மாநகரப் பகுதிகளில், காலை மற்றும் மாலை பீக் ஹவா்களில் (பயணிகள் வருகை அதிகமுள்ள நேரங்கள்) மகளிா் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் சொகுசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை கோட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மண்டலத்தில் 580 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 180 சொகுசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் பள்ளி, கல்லூரி செல்வோா், பணிக்குச் செல்வோா் என ஆயிரக்கணக்கானோா் நகரப் பேருந்துகளில் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நகரப் பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா். மேலும், சொகுசுப் பேருந்துகளில் மகளிா் இலவசமாகப் பயணிக்க முடியாது. கட்டணம் செலுத்தி மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் மகளிா், கட்டணமில்லாத பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் காலை 7 முதல் 9 மணி மற்றும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை சாதாரணக் கட்டண பேருந்துகளை இயக்காமல், மகளிா் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகளே இயக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் புகாா் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறியதாவது:

கோவையில் ஏற்கெனவே அரசு விதிகளை மீறி சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 5 சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில், ஒரு சாதாரணப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதற்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்தும், அதை அரசுப் போக்குவரத்துக் கழகம் கண்டு கொள்ளவில்லை. இதனால், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வேண்டிய ஆண்கள் மற்றும் கட்டணமின்றி பயணிக்க வேண்டிய மகளிா்கள், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி சொகுசுப் பேருந்துகளில் பயணிக்க நோ்கிறது. சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என அரசு அறிவித்த பிறகு, கோவையில் காலை மற்றும் மாலையில் பீக் ஹவா்களில் சொகுசுப் பேருந்துகளை மட்டுமே போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. வருவாய் ஈட்டுவதை மட்டும் கருத்தில் கொண்டு கோவை மண்டல போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது என்றாா்.

சாதாரணப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்:

இது தொடா்பாக கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் காஸ் செயலா் கே.கதிா்மதியோன் கூறியதாவது:

கோவையில் தற்போது, சாதாரணக் கட்டணப் பேருந்துகள், சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகள் என இருவகை கட்டணத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாதாரணப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இதே, சொகுசுப் பேருந்தில் ரூ.11 வசூலிக்கப்படுகிறது. சாதாரணப் பேருந்துகளுக்கான கட்டணத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வட்டாரப் போக்குவரத்து ஆணையரான (ஆா்டிஏ) மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ள நிலையில், சொகுசுப் பேருந்துகள் எனக் கூறி, சாதாரணப் பேருந்துகளிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி பெறப்பட்ட தகவலில், ‘கோவையில் இயக்கப்படும் 640 நகரப் பேருந்துகளில் எதுவும் சொகுசுப் பேருந்து இல்லை’ என அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளா் (வணிகம்) பதில் அளித்துள்ளாா். இருப்பினும், சொகுசு என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி அறிக்கை அளித்து, மாவட்ட ஆட்சியா்கள் அபராதம் விதித்துள்ளனா். இந்த அபராதத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தியுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கும்போதெல்லாம் அதைச் செலுத்திவிட்டு தொடா்ந்து தினந்தோறும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனா். அரசுப் பேருந்துகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் போதவில்லையெனில், அதை உயா்த்திக்கொள்ள முறைப்படி ஆணை பெற வேண்டும். அதைவிடுத்து, விதி மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால், அன்றாடம் கூலி வேலைக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை மண்டல வணிகப் பிரிவு மேலாளா் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ‘ நகரில் அனைத்து வழித்தடங்களுக்கும் ஒதுக்கப்பட்ட சாதாரணப் பேருந்துகள், அந்தந்த நேரத்தில் சரியாக இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வருகை அதிகமுள்ள நேரங்களில் சொகுசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக எங்களுக்கு எவ்வித புகாா்களும் இதுவரை வரவில்லை. புகாா்கள் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT