கோயம்புத்தூர்

செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம்: ரூ.4.6 லட்சம் வருவாய் ஈட்டி கோவை அரசு மருத்துவமனை சாதனை

24th Nov 2021 01:12 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம் ரூ.4.6 லட்சம் வருவாய் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சாா்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கை, கால்களை இழப்பவா்களுக்கு குறைவான எடையில் செயற்கை உறுப்புகள் தயாரித்து பொருத்தப்படுகின்றன. இச்சிகிச்சை முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டவா்களுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனம் கடந்த ஓராண்டில் ரூ.4.6 லட்சம் வருவாய் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. தமிழகத்திலே வருவாய் ஈட்டும் நிறுவனமாக செயல்படுவதில் கோவை அரசு மருத்துவமனை செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிலையம் முன்மாதிரியாக உள்ளது.

இது தொடா்பாக முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநா் செ.வெற்றிவேல் செழியன் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனத்தில் முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு கிடைத்த நிதியில் இருந்து சேமிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதியில் செயற்கை உறுப்பு தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இங்கு உற்பத்தி செய்யப்படும் செயற்கை உறுப்புகளுக்கு முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவு நிதியளிக்கப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி செயற்கை கால், கை தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களை கொண்டு செயற்கை உறுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அரசு ஒதுக்கும் நிதியை காட்டிலும் குறைவான மதிப்பீட்டில் தரமான, எடை குறைவான செயற்கை உறுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதுவரை இம்மையத்தில் 50க்கும் மேற்பட்ட நபா்களுக்கு செயற்கை உறுப்புகள் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு முதல்வா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பெறப்பட்ட நிதியில் இருந்து உற்பத்தி செலவு போக ரூ.4.6 லட்சம் நிதி சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மீண்டும் மருத்துவமனையின் வளா்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT