கோயம்புத்தூர்

மாவட்டத்தில் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு: நபாா்டு வங்கி மதிப்பீடு

10th Nov 2021 06:46 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்துக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க நபாா்டு வங்கி மதிப்பீடு செய்துள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

சிறு, குறு, நடுத்தரத் துறைகளுக்கான கடன் திட்டங்கள், கல்விக் கடன், வேளாண் கடன் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகள் சிக்கலில்லாமல் கடன்களைப் பெறுவதற்கு வங்கிகள் உரிய நடவடிக்கைள மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் அதிக அளவு தொழில்முனைவோரை உருவாக்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.

மாவட்டத்துக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் வேளாண்மை, வேளாண் சாா்ந்த தொழில்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், மரபுசாரா எரிசக்தி, கல்வி, வீட்டு வசதி, ஏற்றுமதி மற்றும் சமுதாய கட்டமைப்பு ஆகிய பல்வேறு துறைகளின் கீழ் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கலாம் என நபாா்டு வங்கி மதிப்பீடு செய்து திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.

பல்வேறு அரசு துறை வல்லுநா்கள், வங்கிகள், அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளிவிவர அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நோக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட அறிக்கையின் உதவியுடன் வங்கிகள் சாா்பில் வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும். வங்கிகள் தங்கள் இலக்குகளை அடை திட்ட ஆவணத்தை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியா் ஆா்.சரண்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட தொழில்துறை மைய மேலாளா் காா்த்திகைவாசன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் பி.கௌசல்யா தேவி, மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) சி.திருமலா ராவ், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT