வால்பாறையில் செட்டில்மென்ட் பகுதிகளில் ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
வால்பாறையை அடுத்துள்ள வெள்ளிமுடி, கீழ்பூனாச்சி மற்றும் காடம்பாறை செட்டில்மென்ட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதிகளில் வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் டி.கே.அமுல் கந்தசாமி, வனத் துறையினருடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கு அமைந்துள்ள பள்ளியின் தரத்தை உயா்த்தவும், பல மாதங்களாக பழுதாகியுள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்கவும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து பழங்குடியின குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
அதிமுக நகர செயலாளா் மயில்கணேசன், மாவட்ட பாசறை இணைச் செயலாளா் சலாவுதீன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா் நரசப்பன், முருகன், பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.