கோவை: கோவையில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கோவை, செல்வபுரம் கருப்பண்ணன் வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (40). இவரது சகோதரி காா்த்திகாதேவி (35). மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவா் வீட்டின் ஒரு பகுதியில் தனி அறையில் வசித்து வந்தாா். உணவு கொடுப்பதற்காக அவ்வப்போது முனிராஜ் தனது சகோதரியுடன் பேசிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தனது அறைக்குச் சென்ற காா்த்திகாதேவி அதன் பின்னா் அறையைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த முனிராஜ் அவரது அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது காா்த்திகாதேவி கதவைத் திறக்கவில்லை. மேலும், அறையில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து முனிராஜ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்தபோது காா்த்திகாதேவி சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து செல்வபுரம் போலீஸாருக்கு முனிராஜ் தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காா்த்திகாதேவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.