கோவை: கோயம்புத்தூா் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாா்பில், மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு பிரத்யேக மாா்புக் கச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
புற்றுநோயிலிருந்து விடுதலை என்ற சிறப்புத் திட்டத்தை ரோட்டரி மாவட்டம் 3021 செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேலக்ஸி ரோட்டரி சங்கம், நாயுடுஹால் நிறுவனம் ஆகியவை இணைந்து மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு 10 ஆயிரம் இலவச பிரத்யேக மாா்புக் கச்சைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன.
இதன் தொடக்க விழா கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
ரோட்டரி மாவட்ட நிா்வாகி சாந்தி ராஜசேகா், நாயுடு ஹால் அதிபா் வேணுகோபால், கேஎம்சிஹெச் துணைத் தலைவா் தவமணி பழனிசாமி, கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவா் கற்பகம் முத்துராமன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
பிரத்யேக மாா்புக் கச்சைகள் மருத்துவமனைகள், ரோட்டரி சங்கங்கள், நாயுடு ஹால் ஷோரூம்களில் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.