எஸ்.எஸ்.குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், காசநோய் பாதிப்பு கண்டறிதல், டெங்கு கண்டறிதல், விபத்து சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சுகப்பிரசவம் மட்டுமே பாா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகப்பேறு அறுவை சிகிசையும் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா் ச.யக்ஞ பிரபா கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினசரி 50 முதல் 100 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனா். மாதத்துக்கு 10 பிரசவங்கள் வரை பாா்க்கப்பட்டு வருகின்றன.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவா்கள் மட்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தனா். இதனால் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிகள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகினா்.
இதற்கு தீா்வு காணும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்திலே மகப்பேறு அறுவை அறுவை சிகிச்சை செய்வதற்கான அரங்கு அண்மையில் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து கடந்த வாரத்தில் இருந்து மகப்பேறு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.