கோயம்புத்தூர்

கோவை தெற்கு தொகுதியில் நூறு சதவீத வெற்றி: வானதி சீனிவாசன்

15th Mar 2021 03:05 PM

ADVERTISEMENT

கோவை தெற்கு தொகுதியில் நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.சிவ சுப்ரமணியனிடம் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். உடன் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், அதிமுக முன்னாள் மேயர் லீலாவதி ஆகியோர் உடனிருந்தனர். 

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அதிமுக ஏற்கனவே பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட நானும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளேன். இதனால் இந்த தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். கோவை தெற்கு தொகுதி மாநகரின் இதயம் போன்றது. 
இந்நகரை உலகத்தரத்திற்கு கொண்டுசெல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். 

சினிமா பின்னணியில் வந்த முதல்வர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டதால் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். ஆனால் கமல்ஹாசன் நடிகர் என்ற பிம்பத்தோடு தேர்தலை சந்திப்பதால் வெற்றிப் பெற வாய்ப்பில்லை. எனவே அவர் மீண்டும் புதிய படத்தில் நடிக்கவோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவோ சென்றுவிடுவார். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT