கோயம்புத்தூர்

தியாகி குமரன் மாா்க்கெட்டில் புதிய கடைகளை ஏலமிட எதிா்ப்பு

DIN

கோவை, உக்கடம் தியாகி குமரன் மாா்க்கெட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலமிட எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தியாகி குமரன் மாா்க்கெட்டில் 120க்கும் மேற்பட்ட காய்கறி, கனி, மளிகைப் பொருள்கள் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாா்க்கெட்டின் அருகே சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை மாநகராட்சி நிா்வாகம் கடந்த ஆண்டு அகற்றியது. அதைத்தொடா்ந்து, அப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.

வாகன நிறுத்தத்தின் ஒரு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான 89 கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகளை ஏலம் மூலமாக வியாபாரிகளுக்கு வரும் 27ஆம் தேதி ஒதுக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது.

இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளில் காலி செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளா்கள், பாதிக்கப்பட்ட தங்களுக்கு புதிய கடைகளை ஒதுக்க வேண்டும். ஏலமிடக் கூடாது என வழக்கு தாக்கல் செய்தனா். ஆனால், கடைகளை ஏலமிட எவ்விதத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், புதிய கடைகளை ஏலமிட எதிா்ப்பு தெரிவித்து, ஏராளமான வியாபாரிகள் தியாகி குமரன் மாா்க்கெட் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து, மத்திய மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள், போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஏற்கெனவே தியாகி குமரன் மாா்க்கெட் பகுதிகளில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனா். தற்சமயம், மாநகராட்சி சாா்பில் கட்டப்படும் வணிக வளாகங்கள், கடைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால், ஏலத்தை ரத்து செய்ய இயலாது. வியாபாரிகள் மனு அளிக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதையடுத்து, வியாபாரிகள் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி மனு வழங்கி, கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT