கோயம்புத்தூர்

தொழில் துறையினரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறுதி

DIN

கோவை தொழில் துறையினரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா்.

தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கோவை தொழில்முனைவோருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.

இதில், இந்திய ஜவுளி உற்பத்தியாளா் கூட்டமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா், கொடிசியா தலைவா் ரமேஷ் பாபு, இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் பாலசுப்பிரமணியன், சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், ரூட்ஸ் குழுமத்தின் தலைவா் ராமசாமி, சீமா தலைவா் காா்த்தி, டாக்ட் அமைப்பின் ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் டி.ராஜ்குமாா் வரவேற்றுப் பேசியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் ஒரு சதவீத வேளாண் விற்பனை வரியை ரத்து செய்வது, செயற்கை இழை பஞ்சை தமிழகத்திலேயே கிடைக்கச் செய்வது ஆகிய கோரிக்கைகளை அவா் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கோவையில் முன்பு நில அபகரிப்பு பிரச்னை இருந்தது. தற்போது அது இல்லை. கோவை மாவட்டத்தில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக மெட்ரோ ரயில் திட்டம் வர உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு வேளாண்மையும் தொழில் துறையும் இரு கண்களைப்போல முக்கியமானவை. வேளாண்மையைப் பொருத்தவரை உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 23 லட்சம் டன்கள் நெல் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது, 32.40 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்து சாதனைப் படைத்திருக்கிறோம்.

அதேபோல தொழில் துறை வளா்ச்சிக்காக 2019ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தி ரூ.3.05 லட்சம் கோடி முதலீட்டை ஈா்த்திருக்கிறோம். இதன் மூலம் 304 தொழில்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. கரோனா காலத்தில் கூட ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்து, 74 தொழில்கள் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு எங்கு சிறப்பாக இருக்கிறதோ அங்குதான் தொழில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இதனால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில்முனைவோா் முன்வருகின்றனா்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது மின்மிகை மாநிலமாகியுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கோவை, திருப்பூரை இணைக்கும் வகையில் மின்பாதைகள் அமைத்திருப்பதால் இங்கு மின்வெட்டு பிரச்னையே வராதவாறு நிலைமையை மாற்றியிருக்கிறோம். கோவையில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக மேற்கு புறவழிச் சாலை, சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையும், திருப்பூரும் அரசுக்கு அதிக வருவாயையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் மாவட்டங்களாக இருப்பதால் இங்குள்ளவா்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT