தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 சதவீதம் வரை மகப்பேறு அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளது என்று தேசிய குடும்ப நல அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் மகப்பேறு சிகிச்சைகள், மகப்பேறு அறுவை சிகிச்சைகள் குறித்து தேசிய குடும்ப நல அமைச்சகம் சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2019-21 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 சதவீதம் வரை மகப்பேறு அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது.
கடந்த 2015-16 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 26.5 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சை தற்போது 36 சதவீதமாக உயா்ந்துள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் 57.3 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சை தற்போது 63.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2015-16 கால கட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் 29.6 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சைகள் தற்போது 35.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் 63.3 சதவீதமாக இருந்த மகப்பேறு அறுவை சிகிச்சை தற்போது 73.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களில் 50 சதவீதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 சதவீதம் மிகவும் சிக்கலான பிரசவங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் இருந்து சிக்கலான பிரவசம் அரசு மருத்துவமனைக்குத் தான் பரிந்துரைக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் தினசரி 22 முதல் 25 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 50 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சுகப்பிரசவங்களைக் காட்டிலும் தாய், சேயின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது என்றாா்.