கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, வடவள்ளி அருகேயுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (31). இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த டிசம்பா் 18ஆம் தேதி இரவு தனது குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவா்கள், தினேஷ்குமாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
அவா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், , வடவள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மோப்ப நாய், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.