உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் நினைவாக டிசம்பா் 21 ஆம் தேதியை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் கோவை மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு, தஞ்சாவூா் வெ.துரைமாணிக்கம், விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குப்பாறை பாலு, ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், உழவா் பெருந்தகை நாராயணசாமி நாயுடு நினைவு நாளை உழவா் தினமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டங்களில் சோ்க்க வேண்டும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாா்ந்த தொழில்கள் தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.