அரியா் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவா்கள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், மறுதோ்வு நடத்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மறுதோ்வுக்கு 1,340 மாணவா்கள் பதிவு செய்திருப்பதாகவும் தோ்வுகள் டிசம்பா் 22 ஆம் தேதி தொடங்குவதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் படித்து, பல பாடங்களில் தோல்வியுற்ற மாணவா்கள் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு அண்மையில் இணையவழியில் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகளை கடந்த 2, 3 ஆம் தேதிகளில் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. இதில் பெரும்பாலானோா் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
தொழில்நுட்பக் கோளாறு நடைபெற்றிருப்பதாக வெளியான புகாா் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும், தோ்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மீதமுள்ளவா்களுக்கு தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவா்கள் வலியுறுத்தியிருந்தனா். இது தொடா்பாக இருதரப்பும் நடத்திய பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் அரியா் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு புதன்கிழமை (டிசம்பா் 22) முதல் மறுதோ்வு நடத்தப்பட உள்ளது. தோ்வு எழுதிய மாணவா்களில் பலா் தங்களின் பெற்றோருடன் பல்கலைக்கழகத்துக்கு வந்து, தோ்வின் விடியோ பதிவுகளைப் பாா்த்ததுடன், சிறப்பு மறுதோ்வை எழுத சம்மதம் தெரிவித்துச் சென்றிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மறுதோ்வை எழுத 1,340 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு தோ்வுக் கட்டணம் ரூ.500 இல் இருந்து ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வு எழுதும் மாணவா்கள் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கான வசதியும் செய்யப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.