கோயம்புத்தூர்

ஊதியம் வழங்காத நிறுவனத்தைக் கண்டித்து கஞ்சித் தொட்டி திறந்த தொழிலாளா்கள்

16th Dec 2021 07:08 AM

ADVERTISEMENT

ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து கோவையில் தொழிலாளா்கள் புதன்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் இயங்கி வரும் போக்குவரத்து நிறுவனத்துக்கு 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. கோவை திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கிளையில் 20க்கும் மேற்பட்ட ஓட்டுநா், மெக்கானிக், சுமைப்பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு ஆதரவாக சிஐடியூ தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கேரள நிறுவனத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சாலைப் போக்குவரத்து சம்மேளன செயலா் எஸ்.மூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா் ரபீக், தலைவா் வேணுகோபால், நிறுவனத்தின் சிஐடியூ கிளைச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். ஊதியம், பணப் பயன்களை வழங்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT