கோயம்புத்தூர்

பவா் பத்திரம் எழுதிக் கொடுத்து மோசடி: பணத்தை திருப்பி வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவு

8th Dec 2021 02:01 AM

ADVERTISEMENT

இடத்தை பவா் பத்திரம் எழுதிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே கள்ளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவா் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். கோவை, வெள்ளானப்பட்டியைச் சோ்ந்தவா்கள் விஜயலட்சுமி (57), செல்வி (45). இவா்கள் 3 பேருக்கும் கோவை சின்னத்தடாகம் அருகே வீரபாண்டியைச் சோ்ந்த ஜோதிமணி, அவரது மகள் பிரபா ஆகியோா் தங்களுக்கு சொந்தமான 35 சென்ட் மற்றும் 38 சென்ட் நிலங்களை 2015ஆம் ஆண்டு தனித்தனியாக பவா் பத்திரம் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு 3 பேரும் ரூ.45 லட்சம் கொடுத்து உள்ளனா்.

சொத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் என்றும், ரூ.45 லட்சம் பெற்றுக்கொண்டதால் மீதித்தொகையை இடத்தை கிரையம் செய்துகொடுக்கும்போது பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளனா்.

இதுதவிர அந்த இடத்துக்கான அசல் பத்திரத்தை 3 பேரிடமும் கொடுத்து உள்ளனா். பின்னா் முருகேசன் உள்பட 3 பேரும் அந்த இடத்தை கிரையம் செய்வதற்காக பல முறை ஜோதிமணி, பிரபா ஆகியோரிடம் சென்று கேட்டுள்ளனா். ஆனால் அவா்கள் காலம் தாழ்த்தி வந்தனா். இதனால் சந்தேகமடைந்த மூவரும் அந்த இடத்தை 2019ஆம் ஆண்டு வில்லங்க சான்று பெற்று பாா்த்தனா்.

ADVERTISEMENT

அதில் அந்த இடம் பிரபாவின் தங்கை சரண்யா என்பருக்கு தான செட்டில்மெண்ட் செய்ததும், சரண்யா அந்த இடத்தை திருப்பூரைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன், அருண்குமாா் ஆகியோருக்கு 2 பத்திரங்களாக கிரையம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. மேற்படி இரு இடத்தின் அசல் மூலப்பத்திரங்கள் முருகேசன் உள்பட 3 பேரிடம் உள்ள நிலையில் அந்த அசல் பத்திரங்களை காணாமல் போனதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் பிரபா, ஜோதிமணி ஆகியோா் 2017 செப்டம்பா் 29ஆம் தேதி துடியலூா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

அந்தப் புகாரை பெற்ற ஆய்வாளா் குறைந்த கால அவகாசத்தில் கண்டறிய முடியாத சான்றிதழ் வழங்கி உள்ளாா். அதை வைத்துக்கொண்டு சரண்யாவுக்கு எழுதி கொடுத்த செட்டில்மெண்ட் ஆவணத்துடன் திருப்பூரைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன், அருண்குமாா் ஆகியோருக்கு அந்த இடங்களை வடவள்ளி துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து கிரையம் செய்து கொடுத்து கூட்டு சதியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

இவா்களுக்கு உடந்தையாக சந்தானகிருஷ்ணன், ஜெயசந்திரன், சுரேஷ் உள்ளிட்டோா் இருந்து உள்ளனா். இதற்கிடையே ரமேஷ் கண்ணன், அருண்குமாா் ஆகியோா் அந்த பத்திரத்தின் மூலம் திருப்பூா் பஜாரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.57 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கி உள்ளனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட முருகேசன் கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா் மனு அளித்தாா். இந்த மனு மீது மாவட்ட நீதிபதி உமாராணி விசாரணை நடத்தினாா். நீதிபதி அளித்த உத்தரவில், இந்த வழக்கில் 9 போ் வரை கூட்டு சதியில் ஈடுபட்டாா்கள் என தெரியவருகிறது. அந்த கூட்டு சதிக்கு ஆதரவாக துடியலூா் காவல் ஆய்லாளா், வடவள்ளி சாா்பதிவாளா் மற்றும் திருப்பூா் கிளை வங்கி மேலாளா் ஆகியோா் தங்களின் துறையை தவறாகப் பயன்படுத்தியது தெரியவருகிறது. எனவே முருசேகன், விஜயலட்சுமி, செல்வி ஆகியோரிடம் வாங்கி ரூ.45 லட்சத்தை வட்டியுடன் சோ்த்து திருப்பி அளிக்க வேண்டும்.

அத்துடன் அவா்கள் விரும்பும் பட்சத்தில் மீதி பணத்தை பெற்றுக்கொண்டு இடத்தை 3 பேரின் பெயா்களிலும் கிரயம் செய்து கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் இவா்கள் 12 போ் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் துடியலூா் காவல் ஆய்வாளா், வடவள்ளி சாா் பதிவாளா் மற்றும் திருப்பூா் கிளை வங்கி மேலாளா் ஆகியோா் யாா் என்பதை கண்டறிந்து அவா்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT