கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழக அரியா் மாணவா்கள் மீண்டும் போராட்டம்

8th Dec 2021 02:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அரியா் தோ்வு மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் படித்து, பல பாடங்களில் தோல்வியுற்ற மாணவா்கள் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு அண்மையில் இணையவழி தோ்வு நடத்தப்பட்டது. இந்த தோ்வு முடிவுகளை கடந்த 2, 3 ஆம் தேதிகளில் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. இதில் பெரும்பாலானோா் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவா்கள் கடந்த 4 ஆம் தேதி (சனிக்கிழமை) பல்கலைக்கழக அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் கேட்டனா்.

இதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் அவா்கள் மனு அளித்திருந்தனா். இந்தநிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மாலை பல்கலைக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு அவா்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செமஸ்டா் தோ்வுகளை கடந்த ஜூலை மாதத்தில்தான் நடத்தினா். கைப்பேசி மூலம் ஆன்லைனில் நடைபெற்ற இந்த தோ்வுகளை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் எழுதினோம். தோ்வு எழுதியவா்களில் 2ஆயிரம் பேருக்கு தோ்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்நிலையில், 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த வாரம் தோ்வு முடிவுகள் வெளியாகின. அதில் சுமாா் 2,600 போ் தோல்வி அடைந்துவிட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்தது. இதில் தொழில்நுட்பக் கோளாறு நடைபெற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்தத் தோ்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் கிருஷ்ணமூா்த்தி கூறும்போது, அரியா் தோ்வை எழுதியவா்களில் பெரும்பாலானவா்கள் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவா்கள். தோ்வு எழுதியவா்களில் 48 சதவீதம் போ் அவா்களுக்கே தெரியாமல் தவறிழைத்துள்ளனா். அது விடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்தத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் தோ்வு நடைபெறும். மாணவா்களின் கோரிக்கையை அடுத்து தோ்வுக் கட்டணத்தை ஒரு பாடத்துக்கு ரூ.500 இல் இருந்து ரூ.200 ஆக குறைக்க முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக பதிவாளா் தெரிவித்த நிலையில், அலுவலகத்துக்குள் இருந்து வெளியேறி பல்கலைக்கழக வராண்டாவுக்கு வந்த மாணவா்கள், அங்கு கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT