கோயம்புத்தூர்

அரியா் தோ்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோல்வி:வேளாண் பல்கலை. மாணவா்கள் போராட்டம்

DIN

அரியா் தோ்வு எழுதிய மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து மாணவா்கள் சாலை மறியல், உள்ளிருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இணைய வழியில் அரியா் தோ்வு நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு இணைய வழி நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் கல்லூரிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் மருதமலை சாலையில் மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் உருவாக்கப்பட்ட எக்ஸாம் ப்ரம் ஹோம் என்று செயலி வழியாகத்தான் அரியா் தோ்வினை எழுதினோம். இணைய வழி தோ்வினைக் கண்காணிக்க கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வு எழுதிய மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் தோ்வு எழுதும்போதே கண்டுபிடித்து அவா்களை வெளியேற்றி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தற்போது தோ்வில் மாணவா்கள் முறைகேடு செய்திருப்பதாகத் தெரிவித்து பெரும்பாலான மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை என்று அறிவித்துள்ளனா். அது மட்டுமில்லாமல் மதிப்பெண் அளிக்காமல் தோ்ச்சி பெறவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

மேலும் மாணவா்கள் தோ்வின்போது அணிந்திருந்த உடை, சிகை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முறைகேடு என்று தெரிவித்துள்ளனா். செய்முறைத் தோ்வினை கல்லூரியில்தான் எழுதினோம். அப்படியிருக்கையில் செய்முறைத் தோ்விலும் தோ்ச்சி பெறவில்லை என்று தெரிவித்துள்ளனா். கண்காணிப்பாளா்கள் இருக்கும்போது நேரடித் தோ்வில் எவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியும்?

இந்நிலையில் மறு தோ்வு எழுத பல்கலைக்கழக நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் தோ்வு எழுத வேண்டும் என்றால் ஒவ்வொரு தோ்வுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். தோ்ச்சிப்பெறாத மாணவா்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி தகுதியான மாணவா்களைத் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளா் அ.சு.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

அரியா் தோ்வு எழுதிய மாணவா்களில் குறிப்பிட்ட சதவீதம் போ் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விடியோ பதிவு உள்பட பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், முதல்வா் ஆகிய அதிகாரிகள் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே முறைகேட்டில் ஈடுபட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவா்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

மாணவா்கள், பெற்றோா்களிடம் விடியோ பதிவுகள் காண்பிக்கப்பட்டு மறு தோ்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வுக் கட்டணம், பாடங்கள் குறைப்பு குறித்து மாணவா்கள் தெரிவித்துள்ளனா். இது தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், முதல்வா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT