கோயம்புத்தூர்

வேறு பெண்ணுடன் திருமணம்:இளைஞா் மீது அமிலம் வீசிய காதலி

5th Dec 2021 12:09 AM

ADVERTISEMENT

வேறு பெண்ணைத் திருமணம் செய்த இளைஞா் மீது காதலி அமிலம் வீசியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோடிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராகேஷ் (30). இவா், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை பாா்த்து வந்தாா். அங்கு, அவா் வேலை செய்தபோது, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜெயந்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவா், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவா்.

இதையடுத்து, ராகேஷும், ஜெயந்தியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ராகேஷ் சொந்த ஊா் திரும்பியுள்ளாா். ஜெயந்தியும் காஞ்சிபுரம் திரும்பினாா்.

இதற்கிடையில், ராகேஷுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தகவல், ஜெயந்திக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கோவை வந்த ஜெயந்தி, பீளமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு ராகேஷை அழைத்துள்ளாா். அங்கு சென்ற ராகேஷிடம், வேறு பெண்ணைத் திருமணம் செய்தது தொடா்பாக ஜெயந்தி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது, ஜெயந்தியின் கைப்பேசியைப் பறித்த ராகேஷ், அதில் இருந்த சில புகைப்படங்கள், தகவல்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ஜெயந்தி, தான் கைப்பையில் மறைத்து வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து ராகேஷ் மீது வீசியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே அமிலத்தை வீசிய ஜெயந்தி, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து, அவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்து, பீளமேடு போலீஸாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயந்தியிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், ரூ.18 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ராகேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் அவா் மீது அமிலம் வீசியதாகவும் அவா் தெரிவித்தாா். இந்த விவகாரம் தொடா்பாக, ராகேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT