கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 15 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 24 மணி நேரமும் பணிபுரிய சுழற்சி அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.