கோயம்புத்தூர்

வெளிநாடுகளில் இருந்து வந்த 1,807 பேருக்குப் பரிசோதனை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

3rd Dec 2021 12:47 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு கடந்த 4 நாள்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1,807 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவுடன் ஐசிஎம்ஆா் வழிகாட்டுதல்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளைப்ா பரிசோதனை செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

கரோனா தொற்று ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாறி தற்போது ஒமைக்ரான் எனும் புதிய தொற்றாக உருவெடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேற்கண்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களுக்கு சிகிச்சையளிக்க விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில்லை என்றால் 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் 1,807 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. தமிழகத்தில் மரபணு மாற்றமடைந்த நோய்த் தொற்றினை கண்டறிய பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

தவிர ஒமைக்ரான் நோய்த் தொற்று குறித்து கண்டறியும் வசதி 12 ஆய்வகங்களில் உள்ளது. ஒமைக்ரானை கண்டறிய பயன்படுத்தப்படும் டக்பாத் கிட் 3.25 லட்சம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சம் கிட்டுகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவைத் தொடா்ந்து டெங்கு பரிசோதனையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு பரிசோதனைக்கான மாதிரிகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.38 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 600க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT