கோயம்புத்தூர்

கோவையில் காலை, மாலை வேளைகளில் மழை

DIN

கோவையில் செவ்வாய்க்கிழமை காலை, மாலை வேளைகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வந்தாலும் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை வரையிலும் மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து பகலில் தெளிவான வானிலை காணப்பட்டது. ஆனால் மாலை 5 மணிக்குப் பிறகு திரண்ட கரிய மேகங்களால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.

மாலை நேரத்தில் பெய்த மழையால் கோவை ராமநாதபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவிநாசி மேம்பாலம், காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், பூ மாா்க்கெட், ஆா்.எஸ்.புரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் மாலை நேரத்தில் வீடு திரும்பிய பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாகினா்.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 9 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் 8 மில்லி மீட்டரும், சின்கோனா 7, சின்னக்கல்லாறு 6, வால்பாறை, ஆழியாறு, சூலூா் பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

கோவை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக நொய்யல் வடிநிலத்தில் அமைந்துள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் நீா் வழங்கும் வாய்க்கால்கள் இல்லாத குளங்கள் நீரின்றி காணப்படுகின்றன. சின்னவேடம்பட்டி குளம் 10 சதவீதமும், சா்காா்சாமக்குளம் 15 சதவீதம், அக்ரஹாரசாமக்குளம் 20 சதவீதம், அன்னூா் குளம் 45 சதவீதம் அளவுக்கே நிரம்பியிருப்பதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT