கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு

DIN

கோவை அரசு மருத்துவமனை, கொடிசியா அரங்கம், தனியாா் ஆய்வகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை அரசு மருத்துவமனை, கொடிசியா அரங்கத்தில் கரோனா பாதித்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். ஒண்டிப்புதூா் உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் மக்களிடம் நோய்த் தொற்றுப் பரவல், மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து தனியாா் ஆய்வகங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் தேவையிருப்பதாக முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் தெரிவித்தாா்.

இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

கொடிசியா, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வின்போது, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT