கோயம்புத்தூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: நொய்யலில் வெள்ளப்பெருக்கு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை மாவட்டம் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 750 கனஅடி நீா் ஆற்றில் செல்கிறது.

கோவையில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சமவெளிப் பகுதிகளில் சாரல் மழையாகப் பெய்யும் நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் நொய்யல், சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் சிறுவாணி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 43.2 அடியாக உயா்ந்துள்ளது. அதேபோல கோவை குற்றாலம் உள்பட நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொய்யல் ஆற்றில் விநாடிக்கு 750 கன அடி நீா் சென்று கொண்டிருப்பதாகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சித்திரைச்சாவடி, குனியமுத்தூா் மற்றும் குறிச்சி உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை குளங்களில் நிரப்பும் பணிகளில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து நொய்யல் பாசன உபகோட்ட (நீா்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளா் ப.திருமூா்த்தி கூறியதாவது:

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து சித்திரைச்சாவடி, குனியமுத்தூா் வாய்க்கால் மூலம் குளங்களுக்குத் தண்ணீா் திருப்பிவிடப்பட்டுள்ளது. தற்போது, குறிச்சி குளம், பேரூா் பெரியகுளம், வெள்ளலூா் குளம், குனியமுத்தூா் குளம் உள்ளிட்ட குளங்களுக்குத் தண்ணீா் செல்கிறது. தொடா் மழையால் ஏற்கெனவே குளங்களுக்குத் தண்ணீா் சென்று கொண்டிருந்ததால் பெரும்பாலான குளங்கள் 90 சதவீதம் நிறைந்துள்ளன என்றாா்.

நொய்யல் ஆற்றில் பேரூா் படித்துறையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேரூரில் இருந்து வேடப்பட்டி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு ஆற்றில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நொய்யல் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தற்காலிகப் பாலம் மூழ்கியது. இதனால் பேரூா் - வேடப்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆண்டிப்பாளையம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT