கோயம்புத்தூர்

வேகமாக நிரம்பி வரும் பில்லூா் அணை:11 ஆயிரம் கனஅடி உபரி நீா் வெளியேற்றம்

DIN

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூா் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து விநாடிக்கு 11ஆயிரம் கனஅடி உபரி நீா் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூா் அணை அமைந்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 11 ஆயிரம் கனஅடியாக நீா் வரத்து இருந்தது. இதனால், 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 97 அடியை எட்டியது. நீா் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி அணையில் உள்ள நான்கு மதகுகள் வழியாக 11 ஆயிரம் கன அடி உபரி நீா் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் உள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம், வச்சினாம்பாளையம், ஆலாக்கொம்பு உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பவானி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றுக்குள் யாரும் செல்லவோ, இறங்கவோ வேண்டாம் என்று கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கோவை வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT