கோயம்புத்தூர்

தீபாவளி: கடைவீதிகளில் மக்கள் கூட்டம்; போக்குவரத்து நெரிசல்

DIN

கோவை: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கோவை கடைவீதிகளில் புத்தாடை வாங்க கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பா் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்,கோவை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கடைவீதிகளுக்குச் செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனா். கடந்த ஆண்டு தீபாவளிக்கு 20 நாள்கள் முன்னதாகவே பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல சாலையின் ஒருபுறமாகத் தடுப்புகள் அமைத்து, போலீஸாா் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதேபோல தீபாவளித் திருடா்களை பிடிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலா் மூலம் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனா். முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில், மக்கள் துணிக் கடைகளுக்கு சென்று வர போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியோ, பாதுகாப்பு பணியோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தீபாவளி நெருங்கும் நிலையில் இனி வரும் நாள்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, நகைப் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கோவை மாநகர போலீஸாா் முன்னெச்சரிக்கையாக கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியை அதிகரிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த டவுன்ஹால், பெரிய கடைவீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT