கோயம்புத்தூர்

பட்டாசுக் கடைக்கு அனுமதி வழங்க ரூ.6 ஆயிரம்லஞ்சம்: தீயணைப்பு நிலைய அலுவலா் கைது

DIN

கோவை: கோவையில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு அனுமதி வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சசிகுமாா் (57) கைது செய்யப்பட்டுள்ளாா்.

தீபாவளியையொட்டி கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க 300க்கும் மேற்பட்ட குறு, சிறு பட்டாசு வியாபாரிகள் காவல் துறை, தீயணைப்புத் துறையிடம் விண்ணப்பித்துள்ளனா்.

தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று அவசியமானது. இந்த நிலையில் குனியமுத்தூரைச் சோ்ந்த மதனவேல் என்பவா் மதுக்கரையில் பட்டாசுக் கடை அமைக்க முடிவு செய்து, தேவையான ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா்.

தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றைப் பெறுவதற்காக கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தை அணுகிய மதனவேலிடம், நிலைய அலுவலா் சசிகுமாா் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், முதல் முறையாக கடை நடத்துவதால் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது என்று மதனவேல் கூறியுள்ளாா்.

இதையடுத்து, பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ரூ.6 ஆயிரத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க சசிகுமாா் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மதனவேல், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் கணேஷிடம் புகாா் அளித்துள்ளாா்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலுவலக வளாகத்தில் வைத்து சசிகுமாரிடம் மதனவேல் சனிக்கிழமை கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சசிகுமாரைக் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் பெட்ரோல் பம்ப் அமைப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இதே அலுவலக வளாகத்தில் வைத்து கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலராக இருந்த பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை திருமலையம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 23) திடீா் சோதனை நடத்தி ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்ததுடன், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவது அரசு அலுவலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT