கோயம்புத்தூர்

தேவை குறைந்ததால் ரூ.1,500 கோடி ஜவுளித் துணிகள் தேக்கம்

DIN

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் தேவையில் மந்த நிலை ஏற்பட்டு ரூ.1,500 கோடி மதிப்பிலான ஜவுளித் துணிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளித் தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கியத் தொழிலாக விசைத்தறி உள்ளது. ஏற்கெனவே தொழிலாளா்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித் துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித் தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பொதுமுடக்கத்தால் முற்றிலும் முடங்கியது. மத்திய, மாநில அரசுகளின் பொது முடக்கத் தளா்வுகளால் விசைத்தறி தொழில் சூடு பிடித்தது. இருப்பினும், ஜவுளிச் சந்தை மந்த நிலையிலேயே உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தேவைக்கு மட்டுமே சில ஜவுளி ரகங்கள் விற்பனையாகின்றன.

மற்ற ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. ரயில்கள் முழுமையாக இயக்கப்படாததால் வடமாநில வியாபாரிகள் தமிழகம் வர முடியவில்லை. ஏற்கெனவே அனுப்பிய ஜவுளிகளுக்கும் உரிய பணம் வந்து சேரவில்லை.

இதனால், திருப்பூா், கோவை மாவட்டங்களில் சுமாா் ரூ.1,500 கோடி அளவுக்கு ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளன.

எனவே பாதிப்படைந்துள்ள ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு வங்கிக் கடன், வட்டி செலுத்துவதில் இருந்து மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு புதிய ஜவுளிக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்த சைசிங் மில் உரிமையாளா் முருகேசன் கூறியதாவது:

மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால் துணி நுகா்வு குறைந்து உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைக் கொள்முதல் செய்ய வட மாநில ஜவுளி வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக் கூடங்களில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள காடா துணி விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. முன்பு வட மாநில ஜவுளி வியாபாரிகள் 60 முதல் 70 நாள்களில் கொள்முதல் செய்த காடா துணிக்கு வங்கிகள் மூலம் பணம் அனுப்பிவைப்பா்.

தற்போது 200 நாள்கள் ஆகியும் துணி விற்ற பணம் வந்து சேரவில்லை. அதனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் சிரமப்படுகின்றனா்.

கரோனா பாதிப்புக்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிடுவாா்கள். அதனால், நிலைமை மாறி இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் துணி உற்பத்தி செய்து வருகிறோம். தற்போதைய சா்வதேச சூழலில் துணி ஏற்றுமதியை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடியாது.

எனவே நாடு முழுவதும் ஜவுளி தொழில் செய்பவா்களைக் காப்பாற்ற வங்கிக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி செலுத்துவதை ஓா் ஆண்டுக்காவது மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைத்தால் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் மேம்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT