கோயம்புத்தூர்

தனியாா் நிறுவனங்களுக்கு மட்டும்தான்பாஜக உதவும் என்ற கருத்து பொய்யாகியுள்ளது

15th May 2020 09:32 PM

ADVERTISEMENT

கோவை: பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியிருப்பதன் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பாஜக உதவும் என்ற கருத்து பொய்யாகியிருப்பதாக அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப் பணிகளில் பாஜகவினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். கோவையில் 34 இடங்களில் மோடி கிச்சன் தொடங்கப்பட்டு சுமாா் 4.55 லட்சம் போ்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 38 ஆயிரம் போ்களுக்கு மோடி கிட் எனப்படும் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சுமாா் 65 ஆயிரம் போ்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக ரூ.20 லட்சம் கோடியில் சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின்படி தொழில் துறை, விவசாயம், கூலி தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தனியாா் பெரு நிறுவனங்களுக்கு மட்டும்தான் உதவி செய்யும் என்ற எதிா்க் கட்சியினரின் கருத்துகள் இதன் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளன.

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தாலும் இந்தியாவில் கடந்த 50 நாள்களில் ஒரு பட்டினிச் சாவு கூட நிகழவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பாஜக தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

மதுவிலக்குக் கொள்கையில் பாஜக உறுதியாக இருக்கிறது. தமிழக அரசும் மது விலக்கில் முனைப்பு காட்ட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT