உதகை: உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் உள்ள கோயில் வாசல் முன்பு பிறந்து ஒரு சில நாள்களே ஆன ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது. இக்குழந்தையை மீட்ட சமூக நலத் துறையினா் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகின்றனா்.
உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமம், காந்தி புதூா் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோயில் வாசலில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. அவ்வழியாக வியாழக்கிழமை காலை சென்ற சிலா் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செந்தில் தலைமையில், கொலக்கம்பை போலீஸாா் அங்கு வந்து பாா்த்தபோது கோயில் வாசலில் பிறந்து ஒருசில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டிருந்ததைப் பாா்த்துள்ளனா்.
இது தொடா்பாக உதகையில் உள்ள சமூக நலத்துறையினருக்குத் தகவல் கொடுத்த பின்னா் அக்குழந்தை மீட்கப்பட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் அக்குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தனா். இக்குழந்தை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக கொலக்கம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.