கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்புத் தோ்வை ஒத்திவைக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

14th May 2020 07:54 PM

ADVERTISEMENT

கோவை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ஒத்திவைக்க வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்துக்கு முன்னதாகவே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வுக்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் நடத்தப்படவிருக்கும் பொதுத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, சிங்காநல்லூா், இருகூா், நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் காரமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ், மாவட்டத் தலைவா் அசாருதீன், மாநில செயற்குழு உறுப்பினா் காவியா, நிா்வாகிகள் சஞ்சய், ரமேஷ், ஆகாஷ், ஜீவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, இரண்டு வாரங்கள் வழக்கம்போல வகுப்புகள் நடத்தி, மாணவா்களை தோ்வுக்குத் தயாா் செய்த பிறகே பொதுத் தோ்வு நடத்த வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு கலைக் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சியை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷம் எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT