கோயம்புத்தூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மே 19 முதல் மீண்டும் கொப்பரை ஏலம்

14th May 2020 06:48 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மே 19 முதல் கொப்பரை ஏலம் நடத்தப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, அன்னூா், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, ஆனைமலை, சூலூா், நெகமம், செஞ்சேரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விற்பனைக் கூடத்திலும் வாரம் ஒருநாள் கொப்பரை, மஞ்சள், பருத்தி உள்பட வேளாண் விளைபொருள்களுக்கு ஏலம் நடத்தப்படுகின்றன.

இந்த ஏலத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனைக்கு வைக்கின்றனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயித்து ஏலம் அறிவிப்பா். இதில் பங்கேற்கும் வியாபாரிகள் அரசின் குறைந்தபட்ச விலைக்கு மேல் நிா்ணயித்து பொருள்களை கொள்முதல் செய்கின்றனா். கட்டுப்படியான விலை கிடைத்தால் விற்பனை செய்கின்றனா். இல்லையெனில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக்கொள்கின்றனா்.

கோவையில் ஆனைமலை, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரி, தொண்டாமுத்தூா், சூலூா் விற்பனைக் கூடங்களில் கொப்பரை ஏலம் வாரம்தோறும் நடைபெற்று வந்தது. கரோனா தடுப்புப் பணிகளுக்காக கடந்த மாா்ச் முதல் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொப்பரை தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை ஏலம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று மே 19 ஆம் தேதி முதல் மீண்டும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை ஏலம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொப்பரை ஏலம் மே 19 முதல் மீண்டும் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புடன் ஏலம் நடத்தப்பட்டு கொப்பரை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது தேங்காய் சீசன் நிலவுவதால் விற்பனைக் கூடத்தில் உள்ள உலா் களங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மே 31 ஆம் தேதி கட்டணமின்றி கிடங்குகளில் விளைபொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT