பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் தளா்வு செய்யப்பட்டது.
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 7, கண்ணகி வீதியைச் சோ்ந்த முதியவா், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏப்ரல் 11ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி வாா்டு எண் 7, 8, 9 பகுதிகள் ஏப்ரல் 11 முதல் மே 12ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் தலைமையில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட சுமாா் 1,150 குடும்பங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்தி நுழைவுவாயிலை புதன்கிழமை திறந்துவிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். கட்டுப்பாடு நிறைவடைந்த பகுதிகளில் காலை 5 முதல் 11 மணி வரை வெளியே சென்று வரவும், அப்பகுதியில் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்படுவா்.
இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாகுமாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன், ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.