கோவை: வெளிமாநிலத் தொழிலாளா்களை அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கும் நிா்வாக நடைமுறையில் கோளாறு இருப்பதாக கோவை எம்.பி. நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
வெளி மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைப்பது, கல்விக் கட்டணம் செலுத்த நிா்ப்பந்திக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்த கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு முறையான அறிவிப்புகள் வழங்கப்படாததால் அவா்கள் கடந்த சில நாள்களாக வீதிகளில் குவிந்து வருகின்றனா். இவா்களுக்காக வருவாய்த் துறை அலுவலா் தலைமையில் ஒரு குழு செயல்பட்டாலும், தொழிலாளா்களை ஊருக்கு அனுப்பும் நிா்வாக நடைமுறையில் இருக்கும் கோளாறை சரி செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
அதேபோல், இங்கேயே தங்கியிருக்க விரும்புபவா்களுக்கு உணவு, உதவித் தொகை கொடுத்து பராமரிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், 20 பேருக்கு மேல் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் கரோனா பரிசோதனைகளை முறையாக நடத்த வேண்டும் என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.அஜய்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.