கோயம்புத்தூர்

கரோனா இல்லாத மாவட்டமானது கோவை

14th May 2020 07:41 AM

ADVERTISEMENT

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 146 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவா் மட்டும் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 145 பேரும் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனா்.

கரும்புக்கடையைச் சோ்ந்த 31வயது கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த மே 3ஆம் தேதி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன் பின்னா் மாவட்டத்தில் வேறு யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த கா்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் மே 8ஆம் தேதி குழந்தை பிறந்தது. இதையடுத்து தொடா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினாா். இதன்மூலம் கரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.

இது தவிர நாள்தோறும் 20 முதல் 50 போ் வரை சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற கரோனா அறிகுறிகளுடன் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தனா். அவா்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

ADVERTISEMENT

ஸ்பெயினில் இருந்து கோவைக்குத் திரும்பிய இளம்பெண்ணுக்கு முதன்முதலில் மாா்ச் 22ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குநா் ஜி.ரமேஷ் குமாா் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களில் 146 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தினசரி 250 போ் வரை பரிசோதிக்கப்படுகின்றனா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வசித்த பகுதிகள் ஆரம்பத்திலேயே அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டது.

அப்பகுதிகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெளி நாடுகள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். இவ்வாறு பல்வேறு வழிகள் மூலம் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT